
சிலாங்கூர், 21 பிப்ரவரி — மலேசியாவின் வானூர்தி துறையில் 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 29,900 வேலைவாய்ப்புகளில் பாதி சிலாங்கூரில் உள்ளதாக மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் இயக்கத்துறை தலைவர் ங் ஸி ஹான், தேசிய வானூர்தி தொழில்துறை ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (NAICO) தரவுகளின்படி, 14,300 வேலைவாய்ப்புகள் சிலாங்கூரில் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
“இது சிலாங்கூரை வானூர்தி தொழில்துறையில் முக்கியமான மாநிலமாக அமைத்துள்ளது. மேலும், 12-ஆவது மலேசியத் திட்டத்தின் (12MP) கீழ் 2025க்குள் 30,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கும் இலக்கை நிறைவேற்றுவதற்கு மிக அருகில் உள்ளது,” என அவர் விளக்கினார்.
மேலும், வானூர்தி துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க, மாநில அரசு தனியார் நிறுவனங்களுடனும், தொழில்துறை தலைவர்களுடனும் இணைந்து உயர்தர வேலை வாய்ப்புகளை வழங்க செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து, தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் இடையிலான இணைப்பை மேம்படுத்த, உடன் தொழில் நியமனங்கள் ஏற்படும் வகையில் வேலை வாய்ப்பு கண்காட்சிகள் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நான்காவது சிலாங்கூர் மாநில வான் போக்குவரத்து கண்காட்சியில் (SAS) 2,270 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டதில், 222 பேர் வேலை பெற்றனர்.
இந்த நடவடிக்கைகளின் மூலம், 2030க்குள் 32,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது எனவும், இது மலேசியா வானூர்தி தொழில் மாதிரி திட்டம் (MAIB) 2030 இலக்குகளை நிறைவேற்ற உதவும் என அவர் குறிப்பிட்டார்.
-யாழினி வீரா