
புத்ராஜெயா, 9 ஏப்ரல்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயா எரிவாயு குழாய் பேரழிவால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் முழுமையான பட்டியலை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்திடம் (MITI) பெறுமாறு மனித வள அமைச்சகத்திற்கு (KESUMA) அறிவுறுத்தியுள்ளார்.
தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்ஸில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கை மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் நிலையை புரிந்து கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தில், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் (MITI) மற்றும் மனிதவள அமைச்சகம் நேரடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன,” என அவர் கூறினார்.
வாயுகுழாய் மூடப்பட்டுள்ளதனால் சில தொழிற்சாலைகள் வாயுகொள்முதல் சிக்கலுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதன் தொடர்பாக , இன்று பிற்பகலில் மலேசிய தொழிற்துறை உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ஆற்றல் ஆணையம் முக்கிய சந்திப்பை நடத்தியது.
-யாழினி வீரா