
கோத்தா கினாபாலு, 6 ஏப்ரல்: சபாவின் கினாபாத்தாங்கானில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிருந்து இருந்து வெளியேற்றப்பட்டோரின் எண்ணிக்கை இன்று மாலை 4 மணி நிலவரப்படி 138 (30 குடும்பங்கள்) ஆக அதிகரித்துள்ளது. இது காலை 131 (29 குடும்பங்கள்) ஆக இருந்தது என சபா பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்தது.
இவர்கள் அனைவரும் புக்கிட் காராம் தேசியப்பள்ளியில் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண மையத்தில் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தொடர் மழையால் ஆறு வெள்ளம் அபாய நிலையில் உயர்ந்ததைத் தொடர்ந்து கினாபாத்தாங்கான் வெள்ள பேரிடர் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. கோத்தா கினபாலுவிலிருந்து சுமார் 306 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மாவட்டத்தில் ஏழு கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் ஜொகூர் மாநிலத்தின் பாட்டு பஹாட் மாவட்டத்திலும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து 285 பேர் (94 குடும்பங்கள்) தற்போது சிரி காடிங் இடைநிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுங்கை செங்காரான் ஆற்றில் நீர் மட்டம் 3.36 மீட்டராக அபாய நிலையில் உள்ளது, மேலும் சுங்கை பத்து பாஹாட் ஆற்றில் 2.30 மீட்டராக எச்சரிக்கை நிலை பதிவாகியுள்ளது.
ஜொகூர் பாரு, மெர்சிங், கோத்தா திங்கி பகுதிகளில் வானிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-வீரா இளங்கோவன்