
படம் : கூகுள்
அமெரிக்கா, 4 பிப்ரவரி- மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதே போல மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் அமெரிக்காவின் வரிவிதிப்புகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள்ள சட்டவிரோதமாகக் குடியேறுவோரை தடுக்க எல்லையில் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்த அந்நாட்டு அதிபர் ஒப்புக் கொண்டுள்ளார். ட்ரம்ப் – மெக்சிகோ அதிபர் கிளாடியாவும் தொலைபேசி உரையாடலில் இப்பிரச்சினை சுமுகத் தீர்வு எட்டப்பட்டதாகவும். அதன் அடிப்படையிலேயே தற்போது ட்ரம்ப் தனது முடிவில் தளர்வு காட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
இதே போல் கனடா நாட்டுப் பிரதமர் ட்ரூடோ எக்ஸ் பக்கத்தில், நானும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்தது. எல்லையில் புதிய ஹெலிகாப்டர்கள், நவீன தொழில்நுட்பம், கூடுதல் வீரர்களுடன் பாதுகாப்பை தீவிரப்படுத்தவுள்ளோம், இதன்மூலம் ஃபெண்டானில் போதைப் பொருள் கடத்தல் தடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
கனடா, மெக்சிகோ மீதான நடவடிக்கை தற்காலிக நிறுத்தம் என்று ட்ரம்ப் சொல்லியிருந்தாலும் கூட சீனா பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. , சீனா பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியிருந்ததால், அது அமலுக்கு வரும் என்றே தெரிகிறது. இந்நிலையில் சீன அதிபருடன் ட்ரம்ப் விரைவில் பேசவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-ஶ்ரீஷா கங்காதரன்