
லண்டன், 19-ஜனவரி, மலேசிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் திறமைகளை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பத்திற்கும் நிபுணத்துவத்திற்கும் மலேசியா உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதற்கு உதாரணமாக, ஜெர்மனிய நிறுவனமான இன்ஃபினியன் டெக்னாலஜிஸ், அண்மையில் மலேசியாவில் €600 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டின் பின்னணி, மலேசியாவின் திறமைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது கொண்ட நம்பிக்கையாகும் என்று பிரதமர் கூறினார்.
மேலும், மலேசிய நிறுவனங்கள், வய்.தி.எல், ஏகோ வோர்ல்ட், சைம் டார்பி, மற்றும் திஎன்பி ஆகியவை இங்கிலாந்தில் தங்களின் திறமைகளை நிரூபித்து, பல்வேறு பொது குத்தகைகளை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளன. இந்த வெற்றிகள் மலேசிய தொழில்நுட்பத்தின் தரத்தையும் மனித வளத்தின் திறமைகளையும் வெளிப்படுத்துகின்றன.
அத்துடன், மலேசிய உயர்தர பல்கலைக்கழகங்களில் உலகம் முழுவதும் இருந்து 1,40,000 மாணவர்கள் கல்வி பயிலும் அளவுக்கு நாட்டின் கல்வி முறை மேம்பட்டுள்ளது என்பதை பிரதமர் வலியுறுத்தினார்.
மலேசியாவின் திறமைகள் மற்றும் தொழில்நுட்பம் உலகளவில் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்பதே தனது தீவிரமான முயற்சியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்