
பாயான் லெப்பாஸ், 11 மார்ச் — பினாங்கு தீவு காவல்துறை நேற்று பிற்பகல் 2 மணி முதல் இன்று அதிகாலை 1 மணி வரை பாயான் லெப்பாஸ் பகுதிகளில் நடத்திய மூன்று வெவ்வேறு சோதனைகளில், போதைப்பொருள் கடத்தல் குழுவை முறியடித்து மூன்று உள்ளூர் ஆண்களை கைது செய்துள்ளது.
26 முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட இந்த சந்தேகநபர்கள் கஞ்சா, ஷாபு, எராமின் வகையான 5 மாத்திரைகள், மஷ்ரூம் கலந்த புகைப்பட்டிகள் மற்றும் கெடும் நீர் போன்ற போதைப்பொருள்களை கடத்தியதாகக் நம்பபடுகிறார்கள் என பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மட் தெரிவித்தார்.
சோதனையில் 5,002 கிராம் கஞ்சா (RM15,500 மதிப்பு), 777 கிராம் ஷாபு (RM25,641 மதிப்பு), 2,000 எராமின் 5 மாத்திரைகள் (RM16,000 மதிப்பு), மஷ்ரூம் கலந்த 7 புகைப்பட்டிகள் (RM175 மதிப்பு) மற்றும் 500 மில்லிலிட்டர் கெடும் நீர் (RM10 மதிப்பு) கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், RM7,200 மதிப்புள்ள இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் RM1,340 ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது. புலனாய்வின் படி, இந்த குழு ஆண்டின் தொடக்கத்திலிருந்து செயல்பட்டுள்ளது, மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 66,000 முறை பயன்படக் கூடியதாக இருக்கலாம்.
அவர்களில் ஒருவருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் மற்றொருவருக்கு முன்பே போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயலில் தொடர்பு இருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் மார்ச் 17 வரை 7 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களுக்கு 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B கீழ் விசாரணை நடைபெறுகிறது.
-யாழினி வீரா