
பாங்கி, 22 அக். – ஒளியும் ஒற்றுமையும் குறிக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாங்கி ரூக்குன் தெத்தாங்கா அமைப்பின் தலைமையில் 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன.
இவ்விழா, பாங்கி தொகுதி கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மதிவேந்தரின் முயற்சியிலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனியாண்டியின் அர்ப்பணிப்பிலும் சிறப்பாக நடைபெற்றது. சமூகத்தின் தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, இம்முறை மேலும் பலருக்கு நம்பிக்கை விதைத்துள்ளது.
தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குடும்பங்களுக்காக நன்கு தயார் செய்யப்பட்ட உணவு கூடைகள் வழங்கப்பட்டன. பொருளாதார சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு இத்தகைய ஆதரவு ஒரு பெரும் துயர்நிவாரணமாக அமைந்தது. சமூக நலனில் அக்கறை கொண்ட இந்த செயல், தீபாவளியின் உண்மையான அர்த்தமான பகிர்வையும் பரிவையும் பிரதிபலித்தது.
இந்த அன்பளிப்புகளை பெற்றுக் கொண்ட குடும்பங்கள், “தீபாவளிக்காக இத்தகைய உதவி கிடைப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. சமூக அக்கறையுடன் செயல்படும் மகேந்திரன், மதிவேந்தர், முனியாண்டி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்,” என தெரிவித்தனர்.
தீபாவளி ஒரு பண்டிகை மட்டுமல்ல; அன்பை பகிரும் தருணம் என்பதைக் காட்டும் வகையில், பாங்கியில் நடைபெற்ற இந்த உதவி நிகழ்ச்சி சமூக ஒற்றுமைக்கும் மனித நேயத்துக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
-யாழினி வீரா



