
மணிலா: பிலிப்பைன்சின் ககாயன் மாகாணத்தை அண்டிய கடற்பகுதியில் ‘ரகசா’ என அழைக்கப்படும் கடும் புயல் உருவாகியுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் இது லூசோன் பிராந்தியத்தை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல்காற்று மற்றும் கடும் மழை காரணமாக பல மாவட்டங்கள் எச்சரிக்கை நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடலோரத்தில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்காக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சுமார் 10,000 பேர் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகள், சமூக மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகளும் அவசரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.
புயல் தாக்கத்தால் மின் விநியோகம் துண்டிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்பதால், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத் துறைக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். கடல் போக்குவரத்து மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ‘ரகசா’ புயல் பிலிப்பைன்சை கடந்து சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் வாய்ப்பு அதிகம். அதனால் சீனாவிலும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரும் சேதம் ஏற்படாமல் இருக்க, அரசு மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும், அதிகாரிகள் தரும் அறிவுரைகளை பின்பற்றும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
‘ரகசா’ புயல் தாக்கம் அடுத்த 36 மணி நேரம் கடுமையாக இருக்கும் என வானிலை துறை தெரிவித்துள்ளது.
-ஸ்ரீ



