Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

அகதிகள் வேலை வாய்ப்பு பெற்றால் பொருளாதாரம் வளரும் – MEF

Picture: Bernama

கோலாலம்பூர், 22 ஜூன்: மலேசிய தொழிலாளர்கள் கூட்டமைப்பு (MEF) தெரிவித்துள்ளதாவது, அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்பாடுகள் உள்ளடங்கிய வேலை வாய்ப்புகளில் சேர்த்தால், நாட்டின் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை தீர்க்கப்படுவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஒரு வழிகாட்டியாக அமையும்.

தற்போது மலேசியாவில் 1.85 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புகலிட கோரிக்கையாளர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் வேலைக்குத் தகுந்தவர்கள் என MEF தலைவர் டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் தெரிவித்தார்.

இவர்கள் திறமையும், ஆற்றலும் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டத் தடைகள் காரணமாக வேலை வாய்ப்புகளை பெற முடியாமல் இருப்பது நாட்டிற்கே இழப்பாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாயம், கட்டுமானம், உற்பத்தி மற்றும் பராமரிப்பு போன்ற துறைகள் கடும் தொழிலாளர் தேவையை எதிர்கொண்டு வருகின்றன. இந்த துறைகளில் அகதிகளை சேர்த்தால், பணியாளர் பற்றாக்குறை குறையலாம் என்றும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 0.5% வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சட்டப்படி வேலை வாய்ப்பு வழங்குவதன் மூலம் சுரண்டலும், சட்டவிரோத வேலை அமலாக்கச் செலவுகளும் குறையலாம் என்றும், இது மனித உரிமை நிலைப்பாட்டை வலுப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அகதிகளை தொழிலாளர் சந்தையில் இணைப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என MEF வலியுறுத்தியுள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top