
கோலாலம்பூர், 3 பிப்ரவரி — மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், 15ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வின் முதல் கூட்டத்தை இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். மலேசியா தலைமையேற்றுள்ள 2024 ஆசியான் மாநாடு, தேசிய வளர்ச்சி திட்டங்கள், மற்றும் அரசின் முக்கியப் பிரேரணைகள் ஆகியவை அவரது அரச உரையில் முன்வைக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற சதுக்கத்தில் மாமன்னரின் வருகையுடன் நிகழ்ச்சி தொடங்கும். பின்னர், சுங்கை பீசி முகாமில் ராயல் மலாய் ரெஜிமென்ட் பட்டாலியனின் வீரர்களால் வழங்கப்படும் மரியாதை அணிவகுப்பை மாமன்னர் பார்வையிடுகிறார்.
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாடு துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹித் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப், அமைச்சர்கள், மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
18 நாட்கள் நீடிக்கும் நாடாளுமன்ற அமர்வில், பிப்ரவரி 4 முதல் 7 நாட்கள் அரச உரையின் மீதான விவாதங்கள், பிப்ரவரி 19 முதல் 25 வரை அமைச்சகங்களின் அறிக்கைகள், பிப்ரவரி 26 முதல் மசோதாக்கள் மற்றும் அரசாங்க விவாதங்கள் நடைபெறும். மார்ச் 3 முதல் 13 நாட்கள் மக்களவை கூட்டம் நடைபெறும்.
இந்த அமர்வில், முஃப்தி (கூட்டாட்சி பிரதேசங்கள்) மசோதா 2024, மலேசிய ஊடக கவுன்சில் மசோதா 2024, மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணைய திருத்த மசோதா 2024 உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இரண்டாவது வாசிப்பு செய்யப்படும்.
2030 மற்றும் 2044 ஆண்டுக்குள் மலேசியா முழுமையான வளர்ச்சி அடைய மேற்கொள்ளும் நீண்டகால பொருளாதார திட்டங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும்.
இதற்கிடையில், அரசியல் கலகம் ஏற்படுவதை தவிர்க்க, இந்த அமர்வு கண்டிப்பாக நடைமுறையில் இருக்கும் என நாடாளுமன்ற சபாநாயகர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் உறுதியளித்துள்ளார்.
-வீரா இளங்கோவன்