
கோலாலம்பூர், 29 மார்ச் : ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கும் புதிய செயல்முறையின் மூலம், மலேசிய மக்களின் 90% பாதிக்கப்படாமல் இருக்கும் என அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, குறைந்தது 85% மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
”நேற்று நாங்கள் ஆய்வு நடத்தியபோது, 85% முதல் 90% மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதது உறுதியாகியுள்ளது. வெளிநாட்டினர் மற்றும் அதிக வருமானம் பெறும் பிரிவினர்கள் மாதம் RM50,000 வரை சம்பாதிக்கிறவர்களாக இருந்தால், அவர்கள் சில கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது,” என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அன்வார், சிலாங்கூர் மாநிலத்தின் ஷா ஆலமில் அமைந்துள்ள ராஜா துன் ஊடா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசியபோது, மக்களுக்கு தேவையற்ற கவலை தேவையில்லை என்றும், உதவித் தொகை பற்றிய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
இதற்கிடையில், இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான், 2025-இன் அரையாண்டிற்குப் பிறகு, ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகையை வழங்கும் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதற்காக, தகுதியுள்ள பிரிவினர்களுக்கு உதவித் தொகை வழங்க, MyKad அடையாள அட்டை மற்றும் மின்-பணப்பையைப் பயன்படுத்துவது ஆய்வு செய்யப்படும் முக்கிய வழிகளில் ஒன்றாகும்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், B40 மற்றும் M40 வர்க்கத்தினருக்கு உதவித் தொகை கிடைக்கும் நிலையில், உயர் வருமானம் பெறும் நபர்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிக கட்டணத்தை செலுத்த நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-யாழினி வீரா