
ஜோகூர் பாரு, ஜூன் 30 – அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் மூன்று குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் Persatuan Kebajikan WEMAD Johor Malaysia மற்றும் RAGSSTAR Media Global இணைந்து “Medical Charity Donation Drive” என்ற மனிதநேய நிதி திரட்டும் நிகழ்வை 2026 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி (சனிக்கிழமை) ஜோகூர் பாருவில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன. –
12 மணி நேரம் நடைபெறவுள்ள இந்த சிறப்பு நிகழ்வின் மூலம் RM50,000 நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரட்டப்படும் நிதி முழுமையாக மருத்துவ அவசர உதவி தேவைப்படும் மூன்று நபர்களின் சிகிச்சை மற்றும் அன்றாட மருத்துவச் செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உதவிபெறவுள்ளவர்களில், எலும்பு மஜ்ஜை (Bone Marrow) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பேச்சுத் திறனை இழந்துள்ள 12 வயது சிறுவன், முழுமையாக பார்வையிழந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் 47 வயது பெண் மற்றும் ஒரு கண்ணில் முழுமையாகவும் மற்றொரு கண்ணில் பகுதியளவிலும் பார்வையிழந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் 52 வயது பெண் ஆகியோர் அடங்குகின்றனர்.
மேலும், இந்த மனிதநேய நிகழ்வில் பாடகர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தன்னார்வமாக இணைந்து பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவில் பண நன்கொடைகளை வழங்கி, மருத்துவ உதவிக்காக போராடி வரும் இந்த மூன்று குடும்பங்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

“Together We Care, Together We Bring Hope” என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்த நிதி திரட்டும் நிகழ்வு, சமூக ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ உதவி தேவைப்படும் குடும்பங்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களின் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



