Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

கருஞ்சட்டை இளைஞர் படையின் ஏற்பாட்டில் சர்ச்சைக்குள்ளாகும் வழிப்பாட்டுத் தலங்கள் கருத்தரங்கு

Picture : Tazhal

கோலாலம்பூர், 4 ஏப்ரல் 2025 : கடந்த சனிக்கிழமை, கோலாலம்பூரில் உள்ள Kuala Lumpur Chinese Assembly Hall அரங்கில் “வழிப்பாட்டுத் தலங்கள்: சிக்கலும் தீர்வும்” என்ற தலைப்பில் கருஞ்சட்டை இளைஞர் படை கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், அரசு சாரா அமைப்புகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, சமீபத்தில் அதிகரித்து வரும் இனவழிப்பாட்டு மற்றும் நிலத் தகராறுகளுக்கான தீர்வுகளை ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கருத்தரங்கில் முக்கிய பேச்சாளர்களாக Latheefa Koya, Arutchelvan, சமூக ஆர்வலர் கௌசல்யா மற்றும் வழக்கறிஞர் குணசேகரன் கலந்து கொண்டனர். சிறுபான்மை இந்தியர்கள் ஆலயச் சிக்கல்களில் உணர்ச்சிவசப்படாமல் சட்ட ரீதியான முறைகளை பின்பற்ற வேண்டும் என லத்திஃபா கோயா வலியுறுத்தினார். நிலத் தகராறுகள் தற்போது சிறுபான்மையினருக்கு எதிரான அழுத்தமாக மாறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கௌசல்யா, இந்த பிரச்சினையை மத அடிப்படையில் மட்டுமே பார்க்காமல், சமூக ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாக அணுக வேண்டும் என வலியுறுத்தினார். Periyar E. V. Ramasamy அவர்களின் பகுத்தறிவு சிந்தனையை எடுத்துக்காட்டாகக் கொண்டு, ஒடுக்குமுறைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என கூறினார். அதேசமயம், சில அரசியல் தரப்புகள் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் இந்தச் சிக்கலை தங்களது கொள்கைகளுக்காக பயன்படுத்துவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

அருட்செல்வன், நிலம் மற்றும் ஆலய விவகாரங்கள் வர்க்கப் போராட்டத்தின் பிரதிபலிப்பாகும் எனக் கூறினார். தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் இன்று சிக்கலுக்கு உள்ளாகுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகும் என அவர் விளக்கினார். வழக்கறிஞர் குணசேகரன், சட்ட ரீதியான பாதுகாப்புகளை விளக்கி, நில உரிமையாளர்கள் தங்களது உரிமைகளை அறிந்து சட்டத்தின் வழியில் போராட வேண்டும் என வலியுறுத்தினார்.

இரண்டு மணிநேரம் நீடித்த இந்த நிகழ்வில் பொதுமக்களும் நேரடியாகக் கேள்விகள் எழுப்பி விளக்கங்களைப் பெற்றனர். கருஞ்சட்டை இளைஞர் படை கடந்த மூன்று ஆண்டுகளாக சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை முன்னெடுத்து பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

Scroll to Top