Tazhal Media – தழல் மீடியா

/ Jun 04, 2026
Latest News
tms

செந்தூல் காளியம்மன் ஆலயத் திருப்பணிக்கு உதவும் வகையில் தங்கக் காசு, தங்க அம்மன் சிலை விற்பனை அறிமுகம்

செந்தூல், 4 ஜூன் – செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் திருப்பணிப் பணிகளுக்கான நிதியை திரட்டும் நோக்கில் அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் காசு மற்றும் சுத்த தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலை விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இளம் தொழில் முனைவர் சிஆர் கார்த்திக் தெரிவித்தார்.

மலேசியாவில் மிகவும் பிரபலமான அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் தற்போது பல லட்சம் ரி.ம. செலவில் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு வருகிறது. ஆலயப் பணிகளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யும் நோக்கில் ஆலய நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.

இந்த ஆலயத் திருப்பணி வெற்றிகரமாக நிறைவேற பக்தர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், 0.2 கிராம் எடையில் அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் காசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் விலை 501 ரி.ம. என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 70 கிராம் சுத்த தங்கத்தில் உருவாக்கப்பட்ட அம்மன் சிலையும் பக்தர்களுக்காக வழங்கப்படுகிறது. 60,000 ரி.ம. மதிப்புடைய இந்த சிலை முதலில் ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜைகளில் வைக்கப்பட்ட பின்னர், 60,000 ரி.ம.-க்கு மேல் வழங்கி பெறும் பக்தரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டது.

தங்கக் காசு மற்றும் தங்க அம்மன் சிலை விற்பனை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆலய நிர்வாகத்தின் முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிஆர் கார்த்திக் தெரிவித்தார். அதோடு, இந்த முயற்சியின் மூலம் பெறப்படும் நிதி முழுவதும் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதற்கிடையில், ஆலயத்தின் கருவறைகள் அனைத்தும் கருங்கற்களால் அமைக்கப்பட்டு வருவதாக கவிமாறன் தெரிவித்தார். இது ஆலயத்தின் பாரம்பரிய கட்டிடக் கலையையும் ஆன்மிக சிறப்பையும் மேலும் உயர்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிஆர் கார்த்திக், கவிமாறன், ஆலயத் தலைவர் சுரேந்திரன் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

-யாழினி வீரா

Scroll to Top