
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, மலேசிய மக்களுக்கும் இந்திய சமூகத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ஒற்றுமை, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவை நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியம் என வலியுறுத்தினார்.
இது ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கும் தருணமாக மட்டுமல்லாமல், கடந்த சாதனைகளை மதிப்பாய்வு செய்து, வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய நேரமாகவும் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்து மக்களையும் உள்ளடக்கும்வகையில் அமைய வேண்டும் என்பதில் இலக்கவியல் அமைச்சு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளையில், உலகளவில் நிலவி வரும் சிக்கல்களையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல்களால் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடி, விலையேற்றம் மற்றும் விநியோக தடைகள் போன்றவை மலேசியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

இந்த சவால்களை சமாளிக்க அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறதாலும், மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். பொருளாதார மீட்சிக்கும் எரிசக்தி பாதுகாப்பிற்கும், மக்கள் பொறுப்புடன் செயல்படுவதோடு அரசின் முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
மேலும், நாட்டின் உண்மையான பலம் சமூக நல்லிணக்கத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலில் வேறுபாடுகளைத் தாண்டி ஒற்றுமையாக செயல்படுவது மிக அவசியம் என தெரிவித்தார். பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மூலம் எதிர்கால தலைமுறைக்கு நிலையான அடித்தளம் அமைக்கலாம் என்றும் கூறினார்.
சித்திரை புத்தாண்டு ஒற்றுமை மற்றும் புதிய நம்பிக்கையின் அடையாளமாக அமைய வேண்டும் என்றும், குடும்பத்தினருடன் கொண்டாடும் இந்த நேரத்தில் உலக அமைதிக்கும் நாட்டின் நல்லிணக்கத்திற்கும் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்துடன், சீக்கிய மற்றும் மலையாளி சமூகத்தினருக்கும் வைசாகி மற்றும் விஷு திருநாள் நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.
-யாழினி வீரா



