
கோலாலம்பூர், 14 ஏப். – சித்திரை புத்தாண்டு, வைசாகி, விஷு ஆகிய திருநாள்கள் ஒரே காலத்தில் கொண்டாடப்படுவது, இந்திய சமூகத்தின் ஆன்மீக அடையாளத்தையும் நாட்டின் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் முக்கிய தருணம் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார். பல சமூகங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவது மலேசியாவின் கலாச்சார செழுமையையும் நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
புத்தாண்டு என்பது ஒரு புதிய தொடக்கம் மட்டுமல்ல; அது தன்னிலைப் பரிசோதனை செய்து, எண்ணங்களை சுத்தப்படுத்தி, நல்ல பண்புகளை வளர்க்கும் வாய்ப்பாக பார்க்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு திருநாளும் ஒளி இருளை வெல்வதையும், தர்மம் அதர்மத்தை வெல்லும் உயர்ந்த கருத்தையும் எடுத்துரைக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரான அவர், இளைஞர்கள் வெற்றியை நோக்கிச் செல்லும் போது ஆன்மீக மதிப்புகளை புறக்கணிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். நல்ல ஆளுமை உருவாக ஆன்மீக அடிப்படை அவசியம் என்றும், இளைஞர்களின் முன்னேற்றமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்திய சமூக முன்னேற்றத்திற்கு பிரதமர் Anwar Ibrahim தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் பாராட்டினார். மடானி கட்டமைப்பின் கீழ் மனிதவள அமைச்சும் மித்ராவும் இணைந்து பொருளாதார முன்னேற்றம் மற்றும் திறன் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
இறுதியாக, மலேசியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, ஆன்மீக வலிமையுடன் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் வளம், நலம் மற்றும் அமைதியை வழங்கட்டும் என்று வாழ்த்தினார்.
-யாழினி வீரா



