Tazhal Media – தழல் மீடியா

/ Jul 19, 2026
Latest News
tms

சிரம்பானில் ஶ்ரீ ராஜ முனீஸ்வரர் ஆலய வருடாந்திர விழா கோலாகலம்; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிரம்பான், 3 ஜூன். – செரம்பானில் அமைந்துள்ள ஶ்ரீ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா கடந்த ஜூன் 1ஆம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறை நாளை முன்னிட்டு மிகுந்த ஆன்மிக எழுச்சியுடனும் பக்தி பரவசத்துடனும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் செரம்பான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். அதிகாலை முதலே ஆலய வளாகம் பக்தர்களின் வருகையால் களைகட்டியிருந்தது.

விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றதுடன், விழா நிகழ்ச்சிகளில் உற்சாகமாக பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மக்கள் கலைஞன் கவிமாறன் கலந்து கொண்டது விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தது. அவர் பக்தர்களுடன் கலந்துரையாடியதுடன், ஆலயத்தின் சமூக மற்றும் ஆன்மிகப் பணிகளைப் பாராட்டியும் பேசினார். அவரின் வருகை பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பல்வேறு ஆன்மிக மற்றும் கலாசார அம்சங்களும் இடம்பெற்றன. இதனால் ஆலய வளாகம் முழுவதும் திருவிழா சூழல் நிலவியது.

இந்த வருடாந்திர திருவிழா பக்தர்களின் ஒற்றுமையையும் ஆன்மிக ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top