
பேராக் மாநிலம் டெலுக் இன்டானில் உள்ள ஜெனரேட்டர் தோட்டம் பிரிவு 2-ல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா எதிர்வரும் ஜூலை 5ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு யாகங்கள், வேத பாராயணங்கள், அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக பக்தர்களின் ஆன்மிக மையமாக திகழும் இந்த ஆலயத்தில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக விழா, பக்தர்கள் அனைவருக்கும் இறையருளைப் பெறும் அரிய வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஜெனரேட்டர் தோட்டத்தில் வாழ்ந்த முன்னாள் குடியிருப்பாளர்கள், தற்போது பிற பகுதிகளில் வசித்து வரும் முன்னாள் தோட்டவாசிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் டெலுக் இன்டான் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ மகா விஷ்ணுவின் அருளாசி மற்றும் அனுக்கிரகத்தைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மகா கும்பாபிஷேக விழா ஆன்மிக ஒற்றுமையையும், பழைய தோட்ட மக்களின் உறவையும் மீண்டும் இணைக்கும் ஒரு புனித நிகழ்வாக அமையும் என்றும், அனைவரின் பங்கேற்பும் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை மக்கள் கலைஞன் கவிமாறன் விடுத்துள்ளதுடன், இறை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு மகா கும்பாபிஷேக விழாவை சிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.



