Tazhal Media – தழல் மீடியா

/ Jul 31, 2026
Latest News
tms

மத உணர்வுகளை தூண்டும் சர்ச்சை: உடனடி நடவடிக்கை எடுக்க சிவமலர் கணபதி கோரிக்கை

கோலாலம்பூர், 10 மார்ச் – பல்லின சமூகங்களுக்கிடையே நீண்ட காலமாக நிலவி வரும் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு காணொளி தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் என்ற நபர், இந்து மதத்தின் புனிதச் சின்னமாகக் கருதப்படும் திரிசூலத்தை காலால் மிதிப்பது போன்ற காட்சியைக் கொண்ட காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயல் இந்து சமூகத்தின் மத உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தும் பொறுப்பற்ற நடவடிக்கையாகும் என்று மக்கள் நீதி கட்சியின் தேசிய உச்சமன்ற உறுப்பினர் சிவமலர் கணபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய செயல்கள் தனிப்பட்ட ஒருவரின் தவறாக மட்டுமே கருதப்பட முடியாது என்றும், பல்வேறு இனங்களும் மதங்களும் இணைந்து வாழும் நாட்டில் சமூக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தாம் மக்கள் நீதி கட்சியில் இணைகிறேன் என்று அறிவித்து பின்னர் அதனை ஒரு வேடிக்கை முயற்சியாகச் சித்தரித்திருப்பது அரசியல் அமைப்புகளின் நடைமுறைகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

மத உணர்வுகளைத் தூண்டிவிடும் இந்த சம்பவம் குறித்து அரச மலேசிய போலீஸ் படையும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

-யாழினி வீரா

Scroll to Top