
கோலாலம்பூர், 13 மே – கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் “வம்சம் புத்திர காமஸ்தி யாகம்” எனும் சிறப்பு ஆன்மீக நிகழ்ச்சி வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பத்துமலை திருத்தல வளாகத்தில் நடைபெறவுள்ளது.
குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த யாகம் நடத்தப்படுவதாக வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார். “கரு உருவாகி குடும்ப வம்சம் தொடர இறைவனை வேண்டி நடத்தப்படும் ஆன்மீக வழிபாடே இந்த யாகம்” என்றும் அவர் கூறினார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் பல நூற்றுக்கணக்கான தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் பெற வழிகாட்டியாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மருத்துவத் துறை மற்றும் ஆன்மீகத் துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகள் வழங்கவுள்ளனர். கர்ப்பம் தரிக்க தாமதமாகும் காரணங்கள், பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மனஅழுத்தம் தொடர்பிலும் விரிவான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

மலேசியாவில் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருவதாகவும், கடந்த ஆண்டு 1.4 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளதாக மருத்துவர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை தெரிவித்தார்.
ஆன்மீகம் மனிதர்களுக்கு மனநிம்மதி மற்றும் நம்பிக்கையை அளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும், வேத மந்திரங்கள் வாழ்க்கை நெறிகளை எடுத்துரைக்கின்றன என்றும் கிரி குருக்கள் கூறினார்.
இந்த பயனுள்ள நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கவிமாறன் கேட்டுக் கொண்டார்.
-யாழினி வீரா



