
Picture : Awani
Kuala Lumpur, 1 ஜூலை 2026: வளர்ந்து வரும் நாடுகள் உலக பொருளாதாரத்தின் நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ள, தங்களது நிதி அமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, அமெரிக்க டாலர் மீதான அதிகப்படியான சார்பையும் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தற்போதைய உலக நிதி அமைப்பு பெரும்பாலும் அமெரிக்க டாலரை மையமாகக் கொண்டு செயல்படுவதால், பெரிய பன்னாட்டு நிறுவனங்களே அதிக பலன் பெறுகின்றன. அதேவேளையில், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வளரும் நாடுகள் புதிய நிதி தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளைப் பயன்படுத்தி தங்களது பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், சர்வதேச வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது காலத்தின் தேவையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவும் சீனாவும் இருதரப்பு வர்த்தகத்தில் Ringgit மற்றும் Yuan நாணயங்களின் பயன்பாட்டை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாகவும், இதன் மூலம் அமெரிக்க டாலர் மீதான சார்பு குறைந்து வருவதாகவும் அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உள்ளூர் நாணயப் பயன்பாடு ஐந்து சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் நிதி சேவைகள் மற்றும் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனை முறைகள் எதிர்கால பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், அவை செலவைக் குறைத்து வர்த்தகத்தை எளிதாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், Ant International நிறுவனம் Kuala Lumpur-இல் தனது உலகளாவிய செயல்பாட்டு மையத்தை அமைத்திருப்பதை அவர் வரவேற்றார். இந்த முதலீடு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உள்ளூர் திறன்களை மேம்படுத்தி, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



