
Picture : Awani
PUTRAJAYA:
பூமிபுத்ரா தொழில்முனைவோரின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், Perbadanan Usahawan Nasional Berhad (PUNB) அமைப்பிற்கான நிதியுதவியை 2026 முதல் 2030 வரையிலான காலப்பகுதியில் RM2.25 பில்லியன் வரை உயர்த்த அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
SParK 2026: Transformasi Niaga நிகழ்ச்சியை தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், கடந்த பல ஆண்டுகளாக PUNB சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வருவதாக கூறினார். அந்தச் செயல்திறன் தொடர்ந்தால், Kementerian Kewangan மூலம் கூடுதல் நிதியுதவியை வழங்க அரசாங்கம் தயக்கம் இன்றி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2026 முதல் 2030 வரை அமல்படுத்தப்படும் R30 திட்டத்தின் கீழ், பூமிபுத்ரா தொழில்முனைவோருக்கு அதிகளவில் நிதியுதவி வழங்குவதுடன், அவர்களின் வணிகத்தை விரிவுபடுத்தவும், போட்டித்திறனை உயர்த்தவும், நீடித்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நிகழ்வில், PROSPER GROW திட்டத்தின் நிதியுதவிக்கான இலாப விகிதம் ஆண்டுக்கு 3.5 விழுக்காடாக குறைக்கப்படுவதாகவும் பிரதமர் அறிவித்தார். மேலும், தொழில்முனைவோரின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் PROSPER GROW BIZ EXPRESS, PROSPER GROW FUEL UP மற்றும் PROSPER GROW AUTO BIZ என்ற மூன்று புதிய நிதி வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த புதிய முயற்சிகள் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் எளிதாக நிதியுதவி பெற்று தங்களது தொழிலை விரிவுபடுத்த உதவும் என்றும், தொழில் தொடங்குபவர்களுக்கும் வளர்ச்சியை நாடுபவர்களுக்கும் இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PUNB, இதுவரை 15,000-க்கும் அதிகமான பூமிபுத்ரா தொழில்முனைவோருக்கு ஆதரவளித்துள்ளது. மொத்தமாக RM5 பில்லியனுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ள இந்த நிறுவனம், நாட்டில் போட்டித்திறன் மிக்க தொழில்முனைவோரை உருவாக்குவதில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவதாக பிரதமர் கூறினார். PUNB-யின் சிறப்பான செயல்பாடு தொடர்ந்தால், எதிர்காலத்திலும் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.



