
Picture : Awani
PUTRAJAYA: தேசிய பாதுகாப்பு என்பது நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் மட்டும் முடிவடைவதில்லை. இன்றைய டிஜிட்டல் காலத்தில் அது ஒவ்வொரு வீடு, குடும்பம் மற்றும் தனிநபரிடமிருந்தே தொடங்குகிறது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
Program Bulan Keselamatan Negara 2026 மற்றும் National Cyber Security Summit (NCSS) 2026 தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தற்போது உடல் ரீதியான எல்லைகளைத் தாண்டி நேரடியாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்குள் நுழையக்கூடியதாக மாறியுள்ளதாக கூறினார்.
முன்னர் தேசிய பாதுகாப்பு என்பது எல்லைகள், இராணுவத் தளங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பொறுப்பாக மட்டுமே கருதப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய சூழலில் ஒவ்வொரு குடிமகனும் இணையவழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, தேசிய பாதுகாப்பு என்பது அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைப்புகளின் பொறுப்பு மட்டுமல்ல என்ற எண்ணத்தை மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலகம் தற்போது மிக வேகமாக மாறிவரும் “போஸ்ட்-நார்மல்” காலகட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அன்வார், பாரம்பரிய அணுகுமுறைகள் புதிய வகை அச்சுறுத்தல்களை சமாளிக்க போதுமானதாக இருக்காது என்றார். அனைத்து அமைச்சகங்களும், அரசுத் துறைகளும் புதிய தொழில்நுட்பங்களை விரைவாகப் புரிந்துகொண்டு, காலத்திற்கேற்ப தங்களது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எல்லைகள் கிடையாது என்பதால், நட்பு நாடுகளுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் கூறினார். இந்த விழாவில் Dasar Kriptografi Negara (MyKriptografi), Pelan Tindakan MyKriptografi 2026-2030 மற்றும் AI Systems Cybersecurity Framework (AISCF) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், NACSA நிறுவனம் Huawei Technologies (Malaysia) Sdn Bhd, MCMC மற்றும் IBM (Malaysia) Sdn Bhd ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டது. இந்த ஒத்துழைப்பு இணையப் பாதுகாப்பு திறன்கள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்தும் என பிரதமர் தெரிவித்தார்.



