
Picture : Awani
CYBERJAYA, 26 ஆகஸ்ட் 2026: எதிர்வரும் தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு, நாட்டில் நிலவும் புகைமூட்ட நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து மக்களும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாடு தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டத்திற்கும், செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ள மலேசிய தினக் கொண்டாட்டத்திற்கும் தயாராகி வருவதாக Anwar Ibrahim தெரிவித்தார்.
“மலேசியாவின் சுதந்திரத்தையும் அதன் பின்னர் மலேசிய தினத்தையும் கொண்டாடுவதற்கு நாம் தயாராகி வருகிறோம். புகைமூட்டம் மேலும் கட்டுப்படுத்தப்பட்டு, கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற இறைவனிடம் பிரார்த்திப்போம்,” என அவர் தெரிவித்தார். CYBERJAYA-வில் புதன்கிழமை நடைபெற்ற Telekom Malaysia நிறுவனத்தின் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை 7 மணி நிலவரப்படி, 11 பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருந்தது. Sarawak மாநிலத்தில் உள்ள Serian பகுதியில் 166 என்ற அளவில் அதிகபட்ச குறியீடு பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து Samarahan பகுதியில் 164 ஆகவும், Sri Aman பகுதியில் 162 ஆகவும் பதிவாகியுள்ளது.
Klang Valley பகுதியில் Cheras, Nilai, Shah Alam, Batu Muda மற்றும் Putrajaya ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது. நாட்டில் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் புகைமூட்ட நிலைமை காணப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



