Tazhal Media – தழல் மீடியா

/ Aug 27, 2026
Latest News
tms

அரசாங்கத்தை விமர்சிக்கும் மாணவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை கூடாது – பல்கலைக்கழகங்கள் பழைய நடைமுறைகளிலிருந்து விடுபட வேண்டும்: பிரதமர்

Picture : Awani

KUALA LUMPUR, 26 ஆகஸ்ட் 2026: அரசாங்கத்தையோ நாட்டின் தலைவர்களையோ விமர்சித்ததற்காக மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு பிரதமர் Datuk Seri Anwar Ibrahim பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பல்கலைக்கழகங்கள் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்துக்கும் விமர்சனச் சிந்தனைக்கும் இடமளிக்கும் தளங்களாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக மட்டும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படக்கூடாது என்றும், பிரதமரை விமர்சித்திருந்தாலும் அதே நிலைப்பாடே பின்பற்றப்பட வேண்டும் என்றும் Anwar Ibrahim தெரிவித்தார். கருத்துடன் தாம் உடன்படுகிறோமா இல்லையா என்பது வேறு விடயம் என்றும், மாணவர்கள் தங்களது வாதங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதிப்பதற்கான வாய்ப்பை பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ள மாணவர் விவகார விதிமுறைகள் உடனடியாகத் தளர்த்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். 1970களில் உருவாக்கப்பட்ட பழைய அணுகுமுறைகள் இன்றைய மாணவர்களின் சுதந்திரமான சிந்தனையைத் தடுக்கும் வகையில் இருக்கக்கூடாது என்றார்.

எனினும், கருத்துச் சுதந்திரம் என்பது எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் அனுமதி அல்ல என்றும் Anwar Ibrahim தெளிவுபடுத்தினார். பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல், வன்முறையில் ஈடுபடுதல் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றுக்கு சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார். அத்தகைய குற்றச்செயல்கள் இடம்பெற்றால், அவற்றை காவல்துறை கையாள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் அமைச்சர்கள் வரும்போது அளவுக்கு அதிகமான வரவேற்புகள் மற்றும் பழைய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதையும் பிரதமர் விமர்சித்தார். பல்கலைக்கழகங்கள் மாணவர்களுடன் நெருக்கமான, திறந்த மற்றும் இயல்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். Universiti Malaya-வில் நடைபெற்ற Malaysia MADANI அறிஞர்கள் மன்றத்தில் உரையாற்றியபோதே பிரதமர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

Scroll to Top