
Picture : Awani
KUALA LUMPUR, 27 ஆகஸ்ட் 2026: நாட்டின் புத்தாக்கம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்துவதற்காக, பழைய அதிகாரத்துவ நடைமுறைகளைக் குறைத்து, ஆய்வாளர்களுக்கு ஆய்வு நிதியைப் பெறுவதில் உள்ள தேவையற்ற சுமைகளையும் தடைகளையும் அகற்ற வேண்டும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
புத்தாக்கம் மற்றும் வணிகமயமாக்கல் துறையில் பழைய அதிகாரத்துவ முறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவது பொருத்தமற்றது என அவர் தெரிவித்தார். குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு புதிய திசைகளையும் புதிய வழிமுறைகளையும் ஆராயும் முக்கிய அமைச்சாக இருப்பதால், பழைய அணுகுமுறைகளிலிருந்து விலக வேண்டும் என்றார்.
ஆய்வாளர்கள் தங்களது பணிகளில் அதிக கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக, ஆய்வு நிதி தொடர்பான நிர்வாகச் சுமைகள் குறைக்கப்பட வேண்டும் என அன்வார் கூறினார். இதன் மூலம் ஆய்வுகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றை வணிகமயமாக்கும் முயற்சிகள் விரைவாக முன்னெடுக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஆய்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இருப்பினும் அரசாங்கத்தின் நிதி வளங்களுக்கு வரம்பு இருப்பதால், கிடைக்கும் வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம், பல்கலைக்கழகங்கள், ஆய்வு மையங்கள், அரசுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவை மேலும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார். இத்தகைய ஒருங்கிணைப்பு மூலம் ஆய்வு நிதி மிகவும் பயனுள்ள முறையில் வழங்கப்படுவதுடன், நாட்டின் புத்தாக்கச் சூழலையும் வலுப்படுத்த முடியும் என்றார்.
மேலும், Malaysia வெறுமனே பொருட்களைத் தயாரிக்கும் நாடாக மட்டுமல்லாமல், தனது சொந்த அறிவு மற்றும் திறனைப் பயன்படுத்தி புதிய பொருட்களையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கி உலகச் சந்தைக்கு வழங்கும் நாடாக மாற வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். NICE 2026 தொடக்க விழாவில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.



