
Picture : Awani
கோலாலம்பூர், 28 ஆகஸ்ட் 2026: முன்னாள் மனிதவள அமைச்சர் சரவணன், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டை அங்கீகரிப்பது தொடர்பாக 10.97 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, சரவணன் தாம் குற்றவாளி அல்ல எனத் தெரிவித்தார். அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார். முதல் குற்றச்சாட்டின்படி, 2022ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 1,000 பணியிட ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கு ஈடாக 1.50 லட்சம் வெள்ளி ரொக்கமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது குற்றச்சாட்டில், அதே நிறுவனத்துக்கான வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்காக 3.50 லட்சம் வெள்ளி பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் 2022ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி இடம்பெற்றதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது குற்றச்சாட்டில், அதே விவகாரத்துடன் தொடர்புடையதாக 5.97 லட்சம் வெள்ளி காசோலை மூலம் பெற்றதாக சரவணன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மூன்று குற்றச்சாட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மொத்தம் 10.97 லட்சம் வெள்ளியாகும். இந்தக் குற்றச்சாட்டுகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
வழக்கில் சரவணனுக்கான பிணைத் தொகை 4.50 லட்சம் வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அருகிலுள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குத் தரப்பு சாட்சிகளை நேரடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பு மூலமாகவோ தொடர்புகொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
வழக்கு மீண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதற்கிடையில், குற்றச்சாட்டுகள் தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



