Tazhal Media – தழல் மீடியா

/ Sep 02, 2026
Latest News
tms

BUDI MADANI: மாதாந்திர எரிபொருள் தகுதி வரம்பு மீண்டும் 300 லிட்டராக உயர்வு

Picture : Awani

Kuala Lumpur, 1 செப்டம்பர் 2026: BUDI MADANI திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர அடிப்படை எரிபொருள் தகுதி வரம்பு இன்று முதல் 200 லிட்டரிலிருந்து மீண்டும் 300 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் BUDI MADANI RON95 (BUDI95) மற்றும் BUDI MADANI Diesel ஆகிய இரு திட்டங்களுக்கும் பொருந்தும்.

BUDI95 திட்டத்தின் கீழ் தகுதி பெறும் மக்களுக்கு மானிய விலையில் RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 என்ற விலையில் வழங்கப்படுகிறது. அதேவேளையில், BUDI Diesel திட்டத்தின் கீழ் தகுதியானவர்களுக்கு டீசல் லிட்டருக்கு RM2.10 என்ற மானிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் பயன்பாட்டுக்கான டீசல் வாகனங்களில் குறிப்பாக பிக்கப் மற்றும் ஜீப் வைத்திருக்கும் தகுதியான உரிமையாளர்களுக்கு மாதாந்திர தகுதி வரம்பு 400 லிட்டர் வரை உயர்த்தப்படலாம். இதற்காக கூடுதலாக 100 லிட்டர் பெற தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே BUDI MADANI திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கான 300 லிட்டர் மாதாந்திர வரம்பு தானாகவே மாற்றியமைக்கப்படும்.

எனினும், கூடுதல் 100 லிட்டர் டீசல் தகுதியை பெற விரும்பும் பிக்கப் மற்றும் ஜீப் உரிமையாளர்கள் புதிய விண்ணப்பத்தை இணையவழியாக சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக அதிகாரப்பூர்வ BUDI MADANI இணையதளம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமரும் நிதியமைச்சருமான Datuk Seri Anwar Ibrahim, தேசிய தின உரையின்போது BUDI MADANI-யின் அடிப்படை மாதாந்திர தகுதி வரம்பை மீண்டும் 300 லிட்டராக உயர்த்துவதாக அறிவித்திருந்தார். இந்த மாற்றம் நாடு முழுவதும் மானிய எரிபொருளைப் பயன்படுத்தும் மக்களுக்கு நேரடி நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top