Tazhal Media – தழல் மீடியா

/ Sep 03, 2026
Latest News
tms

சரவணன் கடிதத்திற்காக இன்னும் காத்திருக்கும் SPRM

Picture : Awani

புத்ராஜெயா, 2 செப்டம்பர் 2026: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM), முன்னாள் மனிதவள அமைச்சர் சரவணன் தொடர்பான ஊழல் வழக்கில் அவர் அனுப்புவதாகக் கூறிய கடிதத்தை இதுவரை பெறவில்லை என அதன் தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமான் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதம் கிடைத்தவுடன் அதனை முழுமையாக ஆய்வு செய்ய SPRM தயாராக இருப்பதாக அவர் கூறினார். புதன்கிழமை SPRM தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சரவணன் தரப்பிலிருந்து கடிதம் இன்னும் தங்களுக்கு வரவில்லை என்றும், அதற்காக காத்திருப்பதாகவும் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்பு தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சரவணன் எழுதிய கடிதம் SPRM அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததை நினைவுபடுத்தினார்.

இதனிடையே, வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படும் தகவல் குறித்தும் அப்துல் ஹலீம் விளக்கம் அளித்தார். சாட்சியின் நிலை உள்ளிட்ட விவரங்கள் விசாரணையின் ரகசியத் தன்மையுடன் தொடர்புடையவை என்றும், விசாரணைக் கோப்பின் தற்போதைய நிலையை விசாரணை அதிகாரிகள் மற்றும் SPRM உயர் அதிகாரிகள் மட்டுமே அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்கு வலுவானதா, ஏன் குற்றப்பத்திரிகை தொடரப்பட்டது போன்ற கேள்விகள் சட்டரீதியாக நீதிமன்றத்தில் பரிசோதிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் கூறினார். வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதன் சாரம்சம் குறித்து தாம் கருத்து தெரிவிக்க முடியாது என்றும், அது நீதிமன்ற பரிசீலனையில் உள்ள விவகாரம் என்றும் அப்துல் ஹலீம் தெளிவுபடுத்தினார்.

கடந்த வாரம் சரவணன், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொத்தம் 10 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்து, குற்றமற்றவர் எனத் தெரிவித்தார். அவருக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் SPRM அலுவலகத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும், வழக்குத் தரப்பு சாட்சிகளைத் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடிதம் கிடைத்த பின்னர் அதில் முன்வைக்கப்படும் தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்புடைய பதிவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படும். ஆனால், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் நடைமுறையை பாதிக்கும் வகையில் முன்கூட்டியே எந்த முடிவும் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார். சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும். இறுதி முடிவு சட்ட நடைமுறைக்கு அமைவாகவே எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார் என்றும்.

Scroll to Top