Tazhal Media – தழல் மீடியா

/ Nov 02, 2026
Latest News
tms

தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கம் துணை நிற்கும் – கோபிந்த் சிங் உறுதி

கோலாலம்பூர், நவம்பர் 2 – மலேசியத் தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கும், பத்திரிகையாளர்களின் நலனுக்கும் அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உறுதியளித்துள்ளார்.மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி ஒன்றுகூடலில் கலந்து கொண்ட அவர், சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் 30,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரங்கில் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பி தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர். ஊடகத்துறையினருடனான தனது உறவு அரசியல் எல்லைகளைக் கடந்தது என்று குறிப்பிட்ட அமைச்சர், பத்திரிகையாளர்களுடன் தமக்கு நீண்டகால தொடர்பு இருப்பதாகக் கூறினார். குறிப்பாக, சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னனுடனான நட்பு பல ஆண்டுகளாகத் தொடர்வதையும் அவர் சுட்டிக்காட்டினார்.தனது தந்தை கர்ப்பால் சிங் பொதுவாழ்வில் இருந்த காலகட்டத்தில் ஊடகங்களுடன் கொண்டிருந்த தொடர்புகளையும் அவர் இந்நிகழ்வில் பகிர்ந்து கொண்டார். சட்டம் தொடர்பான விவகாரங்களில் பொதுமக்களுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்குவதற்காகத் தனது தந்தை பலமுறை செய்தியாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்ததாகவும், அச்சமயங்களில் பத்திரிகையாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இடையே நெருக்கமான தொடர்பு உருவானதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், சமூகத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நாட்டின் ஒற்றுமையைப் பாதிக்கக்கூடாது என வலியுறுத்திய அவர், அரசியல் மாற்றங்கள் இயல்பானவை என்றாலும் மலேசியர்களாகிய நமது பொதுவான அடையாளமும் நாட்டின் நலனும் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்றார்.தேர்தல் காலங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சிந்தித்து, நாட்டையும் மக்களையும் முன்னேற்றக்கூடிய தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் வாக்காளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இதற்கிடையில், சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் நேற்று பத்து கேவ்ஸ் பகுதியில் உள்ள ஷங்கா மண்டபத்தில் தீபாவளி விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோபிந்த் சிங் டியோவுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் சிறப்பான வரவேற்பை வழங்கினர்.

யாழினி வீரா

Scroll to Top