
Picture : Awani
புத்ராஜெயா: மிசிர் அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி மற்றும் மியான்மர் அதிபர் மின் ஆங் ஹ்லைங் உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் அடுத்த வாரம் மலேசியாவுக்கு வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கப் பேச்சாளரும் தகவல் தொடர்பு அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் இதனைத் தெரிவித்தார். மிசிர் அதிபர் எல்-சிசி எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி மலேசியாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
அதேவேளை, மியான்மர் அதிபர் மின் ஆங் ஹ்லைங், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் கலந்துரையாடுவதற்காக மலேசியாவுக்கு வருகை தரவுள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அடுத்த வெள்ளிக்கிழமை மிசிர் அதிபர் மலேசியாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“மியான்மர் அதிபர் பிரதமருடன் கலந்துரையாடுவதற்காக வருகிறார். அதேபோல், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அடுத்த வெள்ளிக்கிழமை மிசிர் அதிபர் மலேசியாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது,” என ஃபஹ்மி தெரிவித்தார். புத்ராஜெயாவில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டுத் தலைவர்களின் வருகை மற்றும் பயண அட்டவணை தொடர்பான விரிவான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் ஃபஹ்மி கூறினார். இதுதொடர்பான தகவல்களை பிரதமர் துறை, பிரதமர் அலுவலகம் அல்லது விஸ்மா புத்ரா மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம், மிசிர் அதிபர் அக்டோபர் மாதத்தில் மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக உறுதிப்படுத்தியிருந்தார்.



