Tazhal Media – தழல் மீடியா

/ Sep 23, 2026
Latest News
tms

ஆசிய விளையாட்டுப் போட்டி: கராத்தே வீராங்கனை ஷாமலராணி நாட்டுக்கான மூன்றாவது தங்கத்தை வென்றார்

Picture : Awani

Asia Aichi-Nagoya 2026 விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தை தேசிய கராத்தே வீராங்கனை சி. ஷாமலராணி வென்றுள்ளார். பெண்களுக்கான 50 கிலோகிராமுக்குக் குறைந்த எடைப் பிரிவு குமித்தே போட்டியில் அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்தார்.

தொயோஹாஷி உடற்பயிற்சி அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஷாமலராணி, ஹொங்கொங்கைச் சேர்ந்த சாங் யீ டிங்கை எதிர்கொண்டார். மூன்று நிமிடங்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முடிவில் இரு வீராங்கனைகளும் எந்தப் புள்ளியையும் பெறாமல் பூஜ்ஜியம்–பூஜ்ஜியம் என்ற நிலையில் இருந்தனர். இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க நடுவர்களின் முடிவு நாடப்பட்டது.

இறுதியில், ஷாமலராணியின் தாக்குதல் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு நான்கு நடுவர்களும் ஒருமனதாக அவரை வெற்றியாளராகத் தேர்வு செய்தனர். இதன் மூலம் மலேசியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கத்தை அவர் பெற்றுக்கொடுத்தார்.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற அரையிறுதியில், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த குல்ஷான் அலிமர்தனோவாவை 3–2 என்ற புள்ளிக் கணக்கில் ஷாமலராணி வீழ்த்தினார். முன்னதாக முதல் சுற்றில் மக்காவைச் சேர்ந்த ஃபோங் மான் வைவை 8–0 என்ற கணக்கிலும், காலிறுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த சாயாமா ஜமானை 5–4 என்ற கணக்கிலும் தோற்கடித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷாமலராணிக்கு இது இரண்டாவது பங்கேற்பாகும். கடந்த 2025ஆம் ஆண்டு எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற உலகக் கராத்தே போட்டியின் இறுதியில் அலிமர்தனோவாவிடம் அவர் தோல்வியடைந்திருந்தார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று அதற்கு சிறப்பான பதிலை அளித்துள்ளார்.

மலேசியாவின் முதல் தங்கத்தை அடியோலா ஃபே ரொபர்ட் வென்ற நிலையில், தாஜ் இஸ்ரின் ஐமான் தாஜ் மதீரா இரண்டாவது தங்கத்தைப் பெற்றுக்கொடுத்தார். ஷாமலராணியின் வெற்றி மூலம் மலேசியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Scroll to Top