
கோலாலம்பூர், அக். 21 –கால்நடை மருத்துவத் துறையில் உயர்கல்வி கற்க விரும்பும் மலேசிய மாணவர்களுக்கு உதவும் வகையில், இந்தோனேசியாவின் IPB பல்கலைக்கழகத்துடன் கல்வி ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளதாக Goon International College அறிவித்துள்ளது.
இந்த முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த கல்லூரியின் இயக்குநர்களில் ஒருவரான பிரபாகரன் பெருமாள், மாணவர்கள் கால்நடை மருத்துவத் துறையில் தங்களது எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள இந்த ஒத்துழைப்பு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் என்றார்.
விலங்குகளின் மருத்துவப் பராமரிப்பு மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் நிபுணர்களின் தேவை முக்கியமானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, 2027ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முன்னிட்டு, மொத்தம் RM1.2 மில்லியன் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை வழங்க கல்லூரி திட்டமிட்டுள்ளது.
அறிவியல் அடிப்படைக் கல்வியை வழங்கும் Foundation in Science பாடநெறியில் சேருவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள் இத்திட்டத்திற்குப் பரிசீலிக்கப்படுவர். சபா, சரவாக் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரக் காரணங்களால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படுவதைத் தடுப்பதும், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

IPB பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவக் கல்வியில் சேர விரும்புவோர், அப்பல்கலைக்கழகம் நிர்ணயிக்கும் கல்வித் தகுதிகள் மற்றும் தேர்வு நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், பட்டத்தின் அங்கீகாரம் மற்றும் மலேசியாவில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றுவதற்கான தொழில்முறைப் பதிவு தொடர்பான நிபந்தனைகளை விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஒத்துழைப்பு, கால்நடை மருத்துவத் துறையில் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினருக்கு உயர்கல்விக்கான புதிய பாதையை உருவாக்கும் என பிரபாகரன் பெருமாள் தெரிவித்தார்.
– யாழினி வீரா



