
Picture : Awani
கோலாலம்பூர், அக். 3 – உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியில் மலேசியா பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்ய, இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு, எண்ணிமமயமாக்கல் மற்றும் குவாண்டம் கணினியியல் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத் துறைகளில் தீவிரமாக அறிவைப் பெற வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
புதிய தொழில்நுட்பம், புதிய அறிவியல் மற்றும் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வுகள் ஆகியவை இளைஞர்கள் ஆராய வேண்டிய முக்கியமான அறிவுத் துறைகளாகும் என அவர் கூறினார். கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 இளைஞர் பொருளாதார மன்றத்தின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சின் திசையை ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டியவர்கள் இளைஞர்களே என்பதால், அவர்களுக்கு புதிய அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை ஆழமாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டின் பொருளாதார வலிமையையும் உலகளாவிய போட்டித்திறனையும் மேம்படுத்துவதற்கு அவசியமானது என அன்வார் தெரிவித்தார்.
அதேவேளை, தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக ஒழுக்கம், நெறிமுறைகள், பண்பாடு மற்றும் மனிதநேய விழுமியங்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி அவசியமானதாக இருந்தாலும், அது மனிதநேயத்தையும் சமூகத்தின் அடிப்படை மதிப்புகளையும் பாதிக்காத வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவுடன் மட்டும் நின்றுவிடாமல், பல்வேறு அறிவுத் துறைகள் மற்றும் மொழிகளிலும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். இளைஞர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவதற்குத் தேவையான இடத்தையும் வாய்ப்புகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் அன்வார் தெரிவித்தார்.



