Tazhal Media – தழல் மீடியா

/ Sep 30, 2026
Latest News
tms

புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தற்காலிக விலக்கு – சிம்

Picture : Awani

கோலாலம்பூர்: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (PMKS) புதிய குறைந்தபட்ச ஊதிய விகித உயர்விலிருந்து தற்போதைக்கு விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் சி கியோங் தெரிவித்தார்.

இந்த முடிவு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் செயல்பாட்டு செலவின அழுத்தம் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இருப்பினும், இந்தத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான மாற்று நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் சிம் தெரிவித்தார். குறிப்பாக, படிப்படியான ஊதியக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் ஊதிய மானிய ஆதரவு மூலம் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்த உதவப்படும் என அவர் குறிப்பிட்டார்.

“தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்வதுடன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து போட்டித்திறனுடன் இயங்கி, வளர்ச்சி அடைந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் உறுதி செய்ய வேண்டும்” என சிம் தெரிவித்தார். குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான விவகாரம் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதம் தொடர்பாக அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் நேற்று தெரிவித்திருந்தார். தற்போது அமலில் உள்ள குறைந்தபட்ச ஊதியமான 1,700 ரிங்கிட்டை உயர்த்துவது அல்லது அதே நிலையில் தொடர்வது தொடர்பான முடிவு, உரிய ஆலோசனைகளுக்குப் பின்னரே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதம் குறித்த விரிவான அறிவிப்பு, 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அக்டோபர் 9ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top