
Picture : Awani
கோலாலம்பூர், அக்டோபர் 1 — மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் தமது பதவிக் காலத்தில் வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக சீனத் தூதர் ஓயாங் யூஜிங்கிற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஓயாங் யூஜிங் இன்று அன்வாரை பிரியாவிடை சந்திப்பாக மரியாதை நிமித்தம் சந்தித்தபோது, பிரதமர் இந்தப் பாராட்டைத் தெரிவித்தார். மலேசியாவும் சீனாவும் பொருளாதாரம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வலுவான உறவை உருவாக்கியுள்ளதாக அன்வார் கூறினார்.
கிழக்குக் கடற்கரை ரயில் திட்டம், ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, துறைமுகங்கள் மற்றும் அரிய மண் கனிமத் தொழில் போன்ற மூலோபாய ஒத்துழைப்புகள் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளை உருவாக்கும் புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவும் சீனாவும் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதுடன், மக்களின் நலன், பிராந்திய அமைதி மற்றும் செழிப்புக்காக புதிய துறைகளையும் ஆராயும் என்று அன்வார் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது, சீனப் பிரதமர் லி சியாங் அனுப்பிய சிறப்பு பரிசாக ஹாங்சோ நகரம் குறித்த ஒரு புத்தகத்தையும் அன்வார் பெற்றுக்கொண்டார். சமீபத்தில் ஹாங்சோவுக்கு சென்றிருந்த அன்வார், அந்த நகரம் லி சியாங் பிறந்த இடம் என்பதையும் குறிப்பிட்டார். அந்த அன்பான நினைவுக்கும் கவனத்திற்கும் தாம் மிகவும் மதிப்பளிப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் ஷாங்காய் மற்றும் ஹாங்சோவுக்கு அன்வார் பணிநிமித்தப் பயணம் மேற்கொண்டிருந்தார். உலகத் திறன் போட்டி மற்றும் உலகளாவிய மின்னணு வர்த்தகக் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதே அந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.



