Tazhal Media – தழல் மீடியா

/ Sep 28, 2026
Latest News
tms

சரவணன் ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார்

Picture : Awani

முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன், தமக்குச் சொந்தமான சொத்துகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கி, விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில், சொத்து அறிவிப்பு தொடர்பான அறிவிப்பை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2019ஆம் ஆண்டு முதல் தமக்குச் சொந்தமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துகள் தொடர்பான தகவல்களை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 36ஆவது பிரிவின் கீழ் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, தமது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ சொத்துகள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கான வழக்கமான நடைமுறை இதுவென சரவணன் விளக்கினார்.

தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவதற்கு தாம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஊழல் தடுப்பு ஆணையம் கோரும் தகவல்களை மறைக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். சொத்து தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்க ஆணையம் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது. தேவைப்பட்டால், கூடுதல் கால அவகாசம் கோருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக சரவணன் கூறினார்.

மேலும், தாம் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கும் சொத்து விவரங்களை ஊடகங்களுக்கும் வெளிப்படையாக வெளியிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். தமக்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். அரசுப் பணியிலும் மக்கள் பிரதிநிதியாகவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள நிலையில், சட்டப்பூர்வமாகப் பெற்ற சொத்துகள் தொடர்பாக தமது நிலைப்பாடு தெளிவாக இருப்பதாக சரவணன் குறிப்பிட்டார்.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் சரவணன் மீது மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்துக்காக 1,000 வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடுகளை அங்கீகரித்தது தொடர்பாக 10 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், சொத்து அறிவிப்பு தொடர்பான விசாரணை நடைமுறைகளில் முழுமையாக ஒத்துழைப்பதாக சரவணன் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

Scroll to Top