Tazhal Media – தழல் மீடியா

/ Sep 23, 2026
Latest News
tms

ஆசிய விளையாட்டுப் போட்டி: தாஜ் இஸ்ரின் ஐமானின் வெற்றி இளைஞர்களுக்கு முன்னுதாரணம் – பிரதமர் அன்வார்

Picture : Awani

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆச்சி–நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தேசிய மின்னணு விளையாட்டு வீரர் தாஜ் இஸ்ரின் ஐமான் தாஜ் மதீராவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரான் டூரிஸ்மோ 7 போட்டியில் தாஜ் இஸ்ரின் ஐமான் பெற்ற வெற்றி, நாட்டின் இளைஞர்களுக்கு குறிப்பாக மின்னணு விளையாட்டுத் துறையில் ஈடுபடுவோருக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.

தமது சமூக வலைத்தளப் பதிவில், விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்கள் தங்களது திறமையை நாட்டின் பெருமையாக மாற்றும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தாஜ் இஸ்ரின் ஐமானின் சாதனைக்காக தாம் பெருமைப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போது சீனாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ள அன்வார், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மலேசிய வீரர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறினார். சீனாவில் தமது பணிகள் நிறைந்திருந்தாலும், மலேசிய வீரர்களின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கவனிப்பதாகவும், நாட்டுக்காக தொடர்ந்து போராடுமாறு வீரர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் பதினொன்று மின்னணு விளையாட்டுப் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்பது பிரிவுகளில் மலேசியா பங்கேற்கிறது. மலேசிய மின்னணு விளையாட்டு சம்மேளனம் குறைந்தது ஐந்து பதக்கங்களை வெல்லும் இலக்கை நிர்ணயித்துள்ளது.

இதற்கு முன்னர் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா மின்னணு விளையாட்டுப் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தது. 2026 ஆச்சி–நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை தொடங்கி, அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Scroll to Top