
Picture : Awani
லாபுவான், அக். 7 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய படங்கள், மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் போன்ற தோற்றத்தில் வெளியிடப்படும் உள்ளடக்கங்கள் குறித்து மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஊடக நிறுவனங்களின் படங்கள் அல்லது சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் உண்மையானவை அல்லது அதிகாரப்பூர்வமானவை என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஃபஹ்மி தெரிவித்தார்.
பிரதமரின் வரவு செலவுத் திட்ட உரைக்கு முன்னதாக சில தரப்பினர் தகவல்களை வெளியிட முயற்சி செய்யக்கூடும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
லாபுவானில் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஒன்பது மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வளாகத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ஃபஹ்மி இதனைத் தெரிவித்தார். அன்வார், நிதியமைச்சராகவும் உள்ள நிலையில், 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
இதற்கிடையில், வரவு செலவுத் திட்ட உரையை பிரதமர் வழங்கும்போது அதனை பல்வேறு ஊடகத் தளங்கள் மூலம் நேரடியாகக் காணுமாறும் ஃபஹ்மி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால், பெர்னாமா மற்றும் மலேசிய வானொலி தொலைக்காட்சி உள்ளிட்ட அதிகாரப்பூர்வமான மற்றும் நம்பகமான ஊடக நிறுவனங்களின் செய்திகளுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.



