Tazhal Media – தழல் மீடியா

/ Oct 22, 2026
Latest News
tms

மலேசியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு AI, டிஜிட்டல் தொழில்நுட்பமே அடுத்தகட்ட உந்துசக்தி – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பல்வேறு தொழில்துறைகளில் விரிவாகப் பயன்படுத்துவது அவசியம் என டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.கைப்பேசி மற்றும் இணையப் பயன்பாட்டுடன் டிஜிட்டல் வளர்ச்சி நின்றுவிடக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், தொழிற்சாலைகள், வாகன உற்பத்தி மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்ட துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடிவதால், தொழில்துறைகளின் செயல்திறனையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மின்னணுவியல், மின்சாரம் மற்றும் உயர்தொழில்நுட்ப உற்பத்தித் துறைகளை வலுப்படுத்தும் வகையில் மலேசியா தனது தேசிய செமிகண்டக்டர் வியூகத்தை முன்னெடுத்து வருகிறது.

பூச்சோங்கில் அமைந்துள்ள ஐசி டிசைன் பார்க், நாட்டின் சிப் வடிவமைப்புத் துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சிகளில் ஒன்றாக விளங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இதனிடையே, மலேசியத் தொழில்துறைகளுக்கு நவீன தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதில் டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பை விரிவுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.உள்ளூர் நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்த தொழில்நுட்பப் பயிற்சிகளும் முறையான செயல்திட்டங்களும் அவசியம் என வலியுறுத்திய கோபிந்த் சிங் டியோ, மலேசியாவில் தனது தொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முடிவையும் வரவேற்றார்.நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

– யாழினி வீரா

Scroll to Top