
Picture : Awani
கோலாலம்பூர், அக். 2 – பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் போராட்டத்தில் ஆர்வம் இல்லாத நிலையில் பதவியில் இருந்து விலகுவது அவருடைய முடிவு என அன்வார் கூறினார். மக்கள் நீதிக் கட்சியின் தலைவரான அன்வார், லீ சியான் சுங் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கட்சி கூட்டங்கள் மற்றும் கட்சி மாநாடுகளில் பங்கேற்கவில்லை என்றும் குறிப்பிட்டார். “நீண்ட காலமாகவே அவர் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. மாநாட்டிலும் பங்கேற்கவில்லை. எனவே, அவருக்கு ஆர்வம் இல்லையென்றால் விலகுவது பிரச்சினையில்லை. இதுவரை அவர் செய்த பங்களிப்புக்கு நன்றி,” என அன்வார் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஒதுக்கீடுகள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகியதால் பாதிக்கப்படாது என்றும் பிரதமர் உறுதியளித்தார். சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், பள்ளிகள், தொழுகைத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.
மேலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகியதால் தொகுதிக்கான அரசாங்கத் திட்டங்கள் நிறுத்தப்படாது என்றும் அன்வார் வலியுறுத்தினார். இந்தப் பதவி விலகல் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்கப்பட்டபோது, அதற்கான முடிவு கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டக் குழுவும் மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.
லீ சியான் சுங் வெள்ளிக்கிழமை நிபந்தனையற்ற முறையில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். முன்னதாக, ஜூன் 12-ஆம் தேதி மக்கள் நீதிக் கட்சியின் மத்திய தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் உடனடியாக விலகியிருந்தார்.



