
Picture : Awani
PENDANG: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் பதவி தொடர்பான விவகாரத்தில் தாம் எந்த வகையிலும் தலையிடவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அந்த அரச நிறுவனத்தைச் சுற்றியுள்ள எந்தவொரு சர்ச்சையும் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மலேசியா அரசியலமைப்பு முடியாட்சியைப் பின்பற்றும் நாடு என்பதால், ஒருவரின் ஆட்சியாளர் பதவியை தன்னிச்சையாக மாற்றவோ அகற்றவோ முடியாது என்று அன்வார் கூறினார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பண்டாங்கில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சியாளர் தொடர்பான விவகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றார். தாம் அந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், சட்டபூர்வமானது எது, சட்டபூர்வமற்றது எது என்பதை உரிய தரப்பினர் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆட்சியாளரை பதவியில் இருந்து அகற்றுவது போன்ற நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளக் கூடாது என்றும் பிரதமர் கூறினார். மலேசியாவின் அரசியலமைப்பு முடியாட்சி அமைப்பு தெளிவான சட்ட அடிப்படையைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதமரும் அமைச்சரவையும் அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட அதிகார வரம்புக்குள் மட்டுமே செயல்பட வேண்டும் என்று அன்வார் கூறினார். இஸ்லாம், மலாய் மொழி, மலாய் மக்களின் உரிமைகள் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் தொடர்பான அரசியலமைப்பு அம்சங்களை தன்னிச்சையாக மாற்றுவதற்கு பிரதமருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் விளக்கினார்.
அரசியலமைப்பு முடியாட்சி அமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அதன் அடிப்படைக் கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆட்சியாளர் பதவியை எளிதில் அகற்றும் நிலை உருவானால், நாட்டின் முடியாட்சி அமைப்பே பாதிக்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் வெறும் அரசியல் பிரச்சினையாக மட்டும் கருதப்படக் கூடாது என்றும், நாட்டின் அரசியலமைப்பு அமைப்புடன் தொடர்புடைய முக்கியமான விடயம் என்றும் அவர் கூறினார். கருத்து வேறுபாடுகள் மற்றும் உணர்ச்சிகளால் நிதானத்தை இழக்காமல், இந்த விவகாரத்தை உரிய முறையில் அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, கெடா மாநிலத்தில் உள்ள பதினான்கு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக கூடுதலாக இருநூற்று எண்பது லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுவதாகவும் பிரதமர் அறிவித்தார். இந்த நிதி ஒதுக்கீடு கல்வி நிறுவனங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மாணவர்களின் கல்விச் சூழலை சிறப்பாக்கவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



