
Picture : Awani
புத்ராஜெயா: பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது கல்விக் காலத்தை கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் மட்டுமல்லாமல், நம்பிக்கை, ஒழுக்கம், தனிப்பண்பு மற்றும் சுய அடையாளத்தை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வியின் நோக்கம் கல்விசார் சாதனைகளை மட்டும் மையமாகக் கொண்டிருக்கக் கூடாது என்றும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்த தலைமுறையை உருவாக்குவதும் அவசியம் என்றும் அவர் கூறினார். கல்வியின் மூலம் பெற்ற அறிவு, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், சமூகத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளைச் சீரமைக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.
பல்கலைக்கழகக் கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமே ஒருவரிடம் நேர்மையையும் தவறான செயல்களை எதிர்க்கும் மன உறுதியையும் உறுதி செய்யாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களில் பலர் உயர்கல்வி பெற்றவர்களாகவும், சிலர் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனவே, அறிவுடன் நல்ல பண்புகளும் வலுவான மன உறுதியும் வளர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். குறிப்பாக இளைய தலைமுறையினர் சமூகத்திற்குச் சேவை செய்யும் ஆர்வத்தையும், மக்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
2026-ஆம் ஆண்டுக்கான தேசிய மாணவர் முன்னுதாரண விருது வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அன்வார் இதனைத் தெரிவித்தார். ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் முன்னுதாரணங்கள் கல்விசார் சாதனைகளுடன் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி, போராட்ட உணர்வு மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய மாணவர் முன்னுதாரணமாக வடக்கு மலேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முகமது அமர் ஆய்தித் முகமது ஸைன் தேர்வு செய்யப்பட்டார்.



