
Picture : Awani
போக்குவரத்து அமைச்சராக இருந்து பதவி விலகும் டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக்கின் விருப்பம் தொடர்பாக அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அந்தோனி லோக்கின் முடிவைத் தாம் மதிப்பதாகவும், அவருக்கு தேவையான கால அவகாசத்தை வழங்குவதாகவும் அன்வார் கூறினார். பதவி விலகும் விருப்பம் குறித்து அந்தோனி லோக்குடன் இதுவரை நேரடியாக கலந்துரையாடி, அவரது விளக்கத்தைக் கேட்கும் வாய்ப்பு தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். டிஏபி மத்திய செயல்குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றதைத் தொடர்ந்து, அந்தோனி லோக் பதவி விலகும் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்த முடிவு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக அன்வார் கூறினார். அதேவேளை, சில தரப்பினர் அரசியல் நோக்கத்துடன் டிஏபி அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என அழுத்தம் கொடுப்பதாகவும், அந்த அழுத்தத்திற்கு அக்கட்சி அடிபணியக்கூடாது என்றும் அன்வார் தெரிவித்தார்.
அந்தோனி லோக் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், மன்னிப்பு தொடர்பான முடிவை அவர் முன்மொழியவில்லை என்றும் அன்வார் குறிப்பிட்டார். மாறாக, அந்த முடிவைத் தடுக்க அவர் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். அந்தோனி லோக்கின் பதவி விலகல் விருப்பம், மதானி அரசாங்கத்தின் முடிவுகளுக்கு எதிரான நிலைப்பாடு அல்லது ஒற்றுமை அரசாங்கத்தின் ஒத்துழைப்பை நிராகரிப்பது என்று பொருளல்ல என்றும் பிரதமர் விளக்கினார்.
அந்தோனி லோக் ஊழலுக்கு எதிரான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கொள்கை சார்ந்த விடயங்களில் தமக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்றும் அன்வார் தெரிவித்தார். இதற்கிடையில், நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



