
Picture : Awani
மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்கான அரசியல் ஒத்துழைப்பு குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வார் இப்ராஹிம், இந்த விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறில்லை என்று கூறிய அவர், யாராவது ஒரு தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறினால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அரசியலில் இயல்பான நடைமுறை என்றும் விளக்கினார். பேச்சுவார்த்தை நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது தொடர்பான முடிவு பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் குழுவிடம் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக வேறு அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார். பெர்சத்து கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எனினும், அந்த விவகாரம் தொடர்பிலும் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பான முடிவைத் தேர்தல் குழுவிடம் ஒப்படைத்துள்ளதாகவும், தாம் தற்போது நாட்டின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். சீனாவுக்கான மூன்று நாள் பணிநிமித்தப் பயணத்தை மேற்கொண்டுள்ள அன்வார் இப்ராஹிம், ஹாங்சோவுக்குச் செல்லும் வழியில் அதிவேக தொடருந்தில் பயணம் செய்தபோது மலேசிய ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப் ரவூப் யூசோப், மலாக்கா மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். இந்தக் கலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டு, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மலாக்கா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.



