Tazhal Media – தழல் மீடியா

/ Sep 25, 2026
Latest News
tms

(Bangsamoro) பங்சமோரோ அமைதிப் பேச்சுவார்த்தைக் குழு பிரதமர் அன்வாரையும் மலேசியாவின் பங்கையும் பாராட்டியது

Picture : Awani

கோலாலம்பூர்: பங்சமோரோ அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றத்தில் மலேசியா வகித்து வரும் பங்கையும் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் ஆதரவையும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி பாராட்டியுள்ளது.

அந்த அமைப்பின் அமைதிச் செயலாக்கக் குழுத் தலைவர் மொஹாகர் இக்பால், பிலிப்பைன்ஸ் அரசுக்கும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் மலேசியாவின் பங்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார். கடந்த 2001ஆம் ஆண்டு முதல் மலேசியா இந்த அமைதிச் செயல்முறைக்கு நடுவராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற பிலிப்பைன்ஸ் அரசுக்கும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்கும் இடையிலான அமைதிச் செயலாக்கக் குழுவின் சிறப்புக் கூட்டத்துக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியாவின் நேர்மையான நடுவர் பங்களிப்பு இல்லாமல் அமைதிச் செயல்முறை தற்போதைய நிலையை எட்டியிருக்க முடியாது என்று தாம் கருதுவதாக மொஹாகர் கூறினார். மேலும், அமைதி ஒப்பந்தத்தின் இறுதி நிறைவு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை மலேசியா தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செயல்முறையை முன்னெடுப்பதில் மலேசியா நடுநிலையாக செயல்படுகிறது என்ற உயர்ந்த நம்பிக்கை இரு தரப்பினரிடமும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பங்சமோரோ மக்களுக்கு மலேசியா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரு தரப்பினரும் சற்று எச்சரிக்கையுடன் இருந்ததாகவும், சில முக்கிய அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் சூழல் நட்பாக மாறியதாகவும் மொஹாகர் கூறினார்.

ஒருநாள் நடைபெற்ற கூட்டத்தில் விரிவான பங்சமோரோ ஒப்பந்தத்தின் கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய மீதமுள்ள பொறுப்புகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். சிறிய மற்றும் இலகுரக ஆயுதங்களை நிர்வகிப்பதற்கான முன்மொழியப்பட்ட கட்டமைப்பில் கொள்கை அடிப்படையிலான உடன்பாடும் எட்டப்பட்டது.

தனியார் ஆயுதக் குழுக்களின் ஆயுதக் களைவு மற்றும் போராளிகளிடையே ஆயுதப் பயன்பாட்டை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் அந்தக் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. மேலும், அமைதி ஒப்பந்தத்தின் மீதமுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான பணிக்குறிப்புகளையும் இரு தரப்பினரும் அங்கீகரித்தனர்.

பிலிப்பைன்ஸ் அரசுக்கும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்கும் இடையிலான அமைதிச் செயல்முறையில் மலேசியாவின் பங்களிப்பு தற்போது இருபத்தைந்தாவது ஆண்டை எட்டியுள்ளது. இதேவேளை, பிரதமர் அன்வாரின் மூத்த சகோதரர் மறைவுக்கு மொஹாகர் இரங்கல் தெரிவித்தார். மலேசிய அரசுக்கும் மக்களுக்கும் பங்சமோரோ மக்களுக்காக வழங்கிய தொடர்ச்சியான உதவிகளுக்காக இறைவன் நன்மை வழங்க வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனை செய்தார். என்றும் அவர் கூறினார்.

Scroll to Top