Tazhal Media – தழல் மீடியா

/ Sep 28, 2026
Latest News
tms

பிரதமர் அன்வார் இப்ராஹிம், மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் சேவைகளை நினைவுகூர்ந்தார்

Picture : Awani

கோலாலம்பூர்: மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலியின் நாட்டுக்கான சேவைகளும் பங்களிப்புகளும் என்றும் நினைவுகூரப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

துன் டாக்டர் சித்தி ஹஸ்மா இன்று காலை தேசிய இருதயக் கழகத்தில் தனது 100ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

மறைந்த சித்தி ஹஸ்மா, பிரதமரின் மனைவியாக இருந்த காலத்தில் சமூக நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதுடன், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து தொடர்ந்து அக்கறை செலுத்தியதாக அன்வார் குறிப்பிட்டார். நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவைகளை மக்கள் தொடர்ந்து நினைவுகூர வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் உள்ள அனைத்துலக இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிகக் கழகத்தில் நடைபெற்ற 2026 அனைத்துலக எதிர்கால மாநாட்டில் உரையாற்றியபோது, துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் மறைவு குறித்த செய்தியை அன்வார் பகிர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் அவருக்காக அல்-ஃபாத்திஹா ஓதுமாறு அன்வார் கேட்டுக்கொண்டார். மறைந்தவரின் ஆன்மா இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனை செய்தார்.

மேலும், துன் டாக்டர் மகாதீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அன்வார் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்கு இறுதி மரியாதை செலுத்த தாம் நேரில் செல்வதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். மறைந்த சித்தி ஹஸ்மா ஏழு பிள்ளைகளை விட்டுச் சென்றுள்ளார். அவரது சமூக நலப் பணிகளும் மக்களுக்கான அக்கறையும் நாட்டின் வரலாற்றில் தொடர்ந்து நினைவுகூரப்படும் என்று அன்வார் தெரிவித்தார்.

Scroll to Top