
Picture : Awani
ஷாங்காய்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சீனாவுக்கான மூன்று நாள் பணிப்பயணத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை ஷாங்காய் நகரை வந்தடைந்தார். அவருடன் மலேசியத் தூதுக்குழுவினரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அன்வார் பயணம் செய்த விமானம், உள்ளூர் நேரப்படி மாலை 5.10 மணிக்கு ஷாங்காய் ஹொங்கியாவ் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது. பிரதமரை சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நார்மன் முஹமட், ஷாங்காய் நகருக்கான மலேசியத் துணைத் தூதரகத் தலைமை அதிகாரி அப்துல்லா மாமோர் இப்ராஹிம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அவரை ஷாங்காய் துணை மேயர் வாங் ஹுவாஜியே, மலேசியாவுக்கான சீனத் தூதர் ஓயாங் யூஜிங் மற்றும் ஷாங்காய் நகர வெளிவிவகார அலுவலகத்தைச் சேர்ந்த சு லின் ஆகியோரும் வரவேற்றனர். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிப்பயணம், பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் அன்வார் சீனாவுக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணமாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தகத்தின் வேகத்தை அதிகரித்தல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவை இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
பிரதமருடன் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானியும், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயிலும் சென்றுள்ளனர். இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ஜெஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹாங்சோவில் சீனப் பிரதமர் லீ கியாங்குடன் வியாழக்கிழமை உயர்மட்ட சந்திப்பு நடைபெறவுள்ளது.
மேலும், ஷாங்காயில் நடைபெறும் உலகத் திறன் போட்டி நிகழ்வில் அன்வார் பங்கேற்கவுள்ளார். புதன்கிழமை நடைபெறும் மாநாட்டின் முழுமையான அமர்வில் அவர் சிறப்புரையாற்ற உள்ளார். ஹாங்சோவில் நடைபெறும் ஐந்தாவது உலகளாவிய மின்னணு வர்த்தகக் கண்காட்சியிலும் அவர் பங்கேற்பார். இந்தக் கண்காட்சியில் மலேசியாவும் ஹங்கேரியும் கௌரவ விருந்தினர் நாடுகளாக இணைந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட இந்தக் கண்காட்சி செப்டம்பர் 23 முதல் 27 வரை நடைபெறவுள்ளது.
சீன தொழில்துறை தலைவர்களுடனான கலந்துரையாடல்களிலும் அன்வார் பங்கேற்று, மலேசியாவுக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 113.82 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.
சீனா தொடர்ந்து 17 ஆண்டுகளாக மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. இதனால் இந்தப் பயணம் இருதரப்பு பொருளாதார உறவுகள், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல புதிய வாய்ப்புகள் உருவாகும்.



