
Picture : Awani
கோலாலம்பூர், அக். 7 – 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுச் சுமையைத் தணிப்பது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பது மற்றும் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் அரசியல் எதிர்பார்ப்புகளை சமநிலைப்படுத்துவது என மூன்று முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்தத் திட்டம் அரசாங்கத்தின் நிதிநிலையை மட்டுமல்லாமல், ஒற்றுமை அரசாங்கத்தின் அரசியல் ஒற்றுமையையும் சோதிக்கும் எனக் கருதப்படுகிறது.
மக்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதுடன், புவிசார் அரசியல் அதிர்வுகளுக்கு மத்தியில் நாட்டின் முதலீட்டு திறனையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். உண்மையில் தேவையுள்ள மக்களுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்றாலும், தொடர்ந்து அதிகரிக்கும் செலவுகள் அரசாங்கத்தின் நிதி இடைவெளியைக் குறைத்து வருவதாகக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார்.
16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய சாதனைகளை எதிர்பார்க்கின்றன. இதனால் வரி, மானியம் மற்றும் அரசாங்கச் செலவுகள் தொடர்பான முடிவுகளில் அரசியல் கணக்கீடுகள் தாக்கம் செலுத்தும் அபாயம் உள்ளது.
மேலும், மேற்கு ஆசிய மோதலால் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் மானியச் செலவு இந்த ஆண்டு 40 பில்லியன் ரிங்கிட்டை எட்டக்கூடும் என நிதியமைச்சு எச்சரித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான மூலோபாயப் போட்டி மலேசியாவின் முதலீட்டு அணுகுமுறையை மேலும் சிக்கலாக்குகிறது. குறைக்கடத்திகள், தொழில்நுட்பம் மற்றும் உயர்தர வேலைவாய்ப்புகளில் முதலீட்டை ஈர்ப்பதுடன், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, நீர் மற்றும் மின்சார உள்கட்டமைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
எனவே, அரசியல் சமரசங்களுக்குப் பதிலாக நீண்டகால தேசிய நலனை முன்னிறுத்தும் தெளிவான பொருளாதாரக் கொள்கையே 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் எனக் கட்டுரையாளர் வலியுறுத்துகிறார்.



