Tazhal Media – தழல் மீடியா

/ Sep 30, 2026
Latest News
tms

குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான அம்சங்களை ஆராய பிரதமர் உத்தரவு

Picture : Awani

புத்ராஜெயா: குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான பல்வேறு அம்சங்களை விரிவாக ஆராயுமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளரும் தகவல் தொடர்பு அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான விவகாரம் கலந்துரையாடப்பட்டதாக ஃபஹ்மி கூறினார். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை எந்தவொரு முழுமையான முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்தும் காலம், அதனால் பயனடையும் தொழிலாளர் குழுக்கள் மற்றும் எந்தெந்தத் துறைகளில் அது அமுல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என ஃபஹ்மி தெரிவித்தார். குறிப்பாக, மலேசிய உற்பத்தியாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகள் வெளியிட்டுள்ள கருத்துகளும் பரிசீலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

“பிரதமர் சில அம்சங்களை மேலும் விரிவாக ஆராயுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நடைமுறைப்படுத்தும் காலம், தொழிலாளர் குழுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும்,” என ஃபஹ்மி தெரிவித்தார். குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பான ஆய்வுகள் நிறைவடைந்த பின்னரே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான ஏதேனும் அறிவிப்பு வெளியிடப்படுமானால், அதற்கான சாத்தியமான காலகட்டமாக அக்டோபர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இருக்கலாம் என ஃபஹ்மி குறிப்பிட்டார். புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Scroll to Top